Ticker

10/recent/ticker-posts

தரம் 06 ஆங்கில பாடத்தில் சர்ச்சைக்குரிய விடயம்: யார் பொறுப்பு? விசாரணை முடிவில் பகிரங்கம்

தரம் 06 இற்கான ஆங்கில பாடப் புத்தகத்தில் சேர்க்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயம் குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதோடு, யார் தவறிழைத்தது, அதன் நோக்கம் என்னவென்பது குறித்து  விசாரணைகளின் பின்னர் பகிரங்கப்படுத்தப்படும். இவ்விடயத்தை முன்னிலைப்படுத்தி புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என்று கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று (06) இடம்பெற்ற பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 2025.11.28 ஆம் திகதியன்று பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், அவசர கால சட்டம் எந்த காரணங்களுக்காகவும் தவறாக பயன்படுத்தப்படாது. அண்மையில் ஏற்பட்டிருந்த இயற்கை அனர்த்த நிலைமையிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கே இச்சட்டம் பயன்படுத்தப்படும்.

இதேவேளை, 06 ஆம் தர ஆங்கிலப் பாடத்தின் ஒரு தொகுதியில் சேர்க்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயம் பற்றி தற்போது பேசப்பட்டு வருகிறது. தேசியக் கல்வி நிறுவனம் பிறிதொரு சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சால் அதிகாரத்தை பிரயோகிக்க முடியாது. நிறுவனத்தின் ஆணைக்குழுவினூடாக இப்பிரச்சினை தொடர்பில் விரிவாக ஆராயப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் எதனையும் மறைக்க வேண்டியதொரு அவசியம் எமக்கு கிடையாது. இடம்பெற்ற தவறு தொடர்பில் முறையாக விசாரனை மேற்கொள்ளப்படுகிறது. யார் தவறு இழைத்தது, அதன் நோக்கம் என்ன என்பது குறித்து விசாரணைகளின் பின்னர் பகிரங்கப்படுத்தப்படும்.

இப்பாடப்புத்தகங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவில்லை. ஆகவே, இந்த விடயத்தை முன்னிலைப்படுத்தி புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்’’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.



Post a Comment

0 Comments