கூகுள் தேடுபொறியின் (Google Search) செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பம், 'தற்போதைய ஆண்டு எது?' என்பது குறித்து முன், பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளமை இணையவாசிகளிடையே பேசுபொருளாகியுள்ளது.
புத்தாண்டு பிறந்து ஒரு வாரம் கடந்த நிலையில், '2026 அடுத்த வருடம்' என்று கூகுளின் செயற்கை நுண்ணறிவு அளித்த பதில் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
"2027 அடுத்த வருடமா?" என்று பயனர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, "இல்லை, 2026 தான் அடுத்த வருடம்" என்று கூகுள் தேடுபொறி தொழிநுட்பம் பதிலளித்துள்ளது.
குறித்த பதிலின் அடுத்த பகுதியில், தற்போதைய ஆண்டு 2026 என்றும், அடுத்த ஆண்டு 2027 என்றும் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான பதில்கள் மூலம் கூகுளின் AI தொழில்நுட்பமானது, தற்போதைய வருடம் 2025 மற்றும் 2026 ஆகிய இரண்டுக்கும் இடையில் ஒருவித குழப்பத்தில் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பயனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஸ்கிரீன்ஷாட்டை பயனர் சமூக வலைத்தளத்தில் பகிரவே, இன்னும் மேம்படுத்த வேண்டுமென்று எலான் மஸ்க் கருத்திட்டதால் உலகளவில் ஒரே நாளில் இத்தகவல் வைரலானது.
ஏலவே, எக்ஸ் (X) தளத்தின் குரோக் செயற்கை நுண்ணறிவு, சிறுவர்கள் மற்றும் பெண்களின் மோசமான படங்களை வெளியிட்டு மக்களின் அதிருப்திகளை பெற்றிருந்த நிலையில் தற்போது கூகுள் செயற்கை நுண்ணறிவும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
கூகுள் செயற்கை நுண்ணறிவு விமர்சிக்கப்படுவது இது ஒன்றும் முதன் முறையல்ல.
ஏற்கனவே, க்ளூவை பிட்சாவில் சேர்த்து சாப்பிடலாம், உடலுக்கு விட்டமின்கள் கிடைக்க வேண்டும் என்றால் பாறைகளை சாப்பிடலாம் என்று கூகுள் வழிகாட்டி சர்ச்சைக்குள்ளாகியிருந்தது.
அது மட்டுமல்லாமல், உடல் நலம் தொடர்பில் மோசமான குறிப்புகளை செயற்கை நுண்ணறிவு வழங்கி வருவதாகவும், அதனை மக்கள் அப்படியே நம்ப வேண்டாம் என்றும் ஊடகங்கள் எச்சரிக்கை செய்து வருகின்றன.

0 Comments