Ticker

10/recent/ticker-posts

மாகாண சபைத் தேர்தல் எப்போது?

மாகாண சபைத் தேர்தலானது அநேகமாக இவ்வருடத்தின் இறுதி வரை ஒத்திவைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இவ்விடயம் தொடர்பில் விளக்கமளித்துள்ள பொது நிர்வாக, உள்ளூராட்சி சபைகள், மாகாண சபைகள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன கருத்துத் தெரிவிக்கையில், எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட பேரிடரின் காரணமாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். 

இதன் காரணமாக மாகாண சபைத் தேர்தல் குறிப்பிட்ட காலத்துக்கு தாமதம் ஏற்படக் கூடுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இருந்த போதும் இவ்வருடத்தின் முதல் சில மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இதற்கு முன்னர் அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. 

மேலும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் நிலவுகின்ற சட்டப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியுள்ளதாகவும் அதனுடன் தொடர்புடைய திருத்தங்களை விரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார். 

மாகாண சபைத் தேர்தல் முறைமையில் தொடர்பில் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் பாராளுமன்ற கோட்பாட்டுப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இயற்கை அனர்த்தங்களால் ஏற்பட்ட பேரழிவுகளுக்காக பெருந்தொகையான நிதியை செலவு செய்ய வேண்டியுள்ள நிலைமையில் மாகாண சபைத் தேர்தலுக்காக இன்னும் பெருந்தொகை நிதியை செலவளிப்பது நெருக்கடி நிலைமை ஏற்படுத்தும் என்று அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சகல மாகாண சபைகளினதும் உத்தியோகபூர்வ கால எல்லை நிறைவடைந்து 11 வருடங்களுக்கு அதிகமாகின்ற நிலையில், சகல மாகாண சபைகளும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.  



Post a Comment

0 Comments