இலங்கையில் கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் 68 யானைக்கால் நோய் (Filariasis) பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக யானைக்கால் நோய் தடுப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
இப்பரிசோதனைகளின் போது கண்டறியப்பட்ட நோயாளர்களில் சரிபாதியானோர் இந்தியாவிலிருந்து வருகை தந்து இலங்கையில் பணியாற்றும் வெளிநாட்டுப் பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யானைக்கால் நோய் தடுப்பு இயக்கத்தின் பணிப்பாளரான மருத்துவர் பிரசங்க சேரசிங்க இது குறித்து தெரிவிக்கையில் 68 நபர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 34 பேர் இலங்கையர்கள் என்றும், ஏனைய 34 பேர் இலங்கையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள இந்தியப் பிரஜைகள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் இந்த நோய் தொற்று பிரதானமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, குருநாகல் ஆகிய 07 மாவட்டங்களில் தொடர்ச்சியாக பதிவாகி வருவதாக அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இலங்கையிலிருந்து யானைக்கால் நோயை 2030ஆம் ஆண்டுக்குள் முழுமையாக ஒழிப்பதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது.
உள்ளூர் ரீதியாகப் பரவும் தொற்றுகளை பூச்சியமாகக் குறைப்பதற்கும், நோயின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் பொதுச் சுகாதாரக் கண்காணிப்புத் திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது இந்த நோய் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், முறையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் ஊடாக இதனை முறியடிக்க முடியும் என்றும் சுகாதாரத் துறையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

0 Comments