பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு நிதியளித்த உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்தில் 217 அமைப்புகள் மற்றும் தனிநபர்களினதும் அவற்றால் சொந்தம் கொள்ளப்பட்ட அல்லது வைத்திருக்கப்பட்ட சகல நிதியங்கள், ஏனைய நிதிசார் சொத்துகள் மற்றும் பொருளாதார வளங்கள் என்பவற்றை முடக்குவதாக அறிவித்து பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவால் அதிவிஷேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி கடந்த வெள்ளிக்கிழமை (30) பாதுகாப்புச் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளதுடன், இவ்வர்த்தமானி அறிவித்தலில் முக்கியமான 15 அமைப்புகளின் சொத்துகள் மற்றும் நிதியங்களும் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த வர்த்தமானியூடாக பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய மற்றும் நிதியளித்த 202 நபர்களின் சொத்துகள் மற்றும் நிதியங்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதிய 1758/19 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2012 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கு விதிகளின் நோக்கத்துக்காக தகுதி வாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டு சொல்லப்பட்ட ஒழுங்குவிதிகளின் 05 ஆம் ஒழுங்கு விதியிலுள்ள நியதிகளின்படி, இந்த ஒழுங்கு விதிகளின் 04 ஆம் ஒழுங்கு விதியின் கீழும் காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டவாறானதும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதிய 2438/47ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பட்டியலுக்கான திருத்தத்தால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறானதுமான 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதிய 1854/41ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பெயர் குறித்து நியமிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டதுமான எவரேனும் இயற்கை அல்லது சட்ட ஆள் அல்லது ஏதேனும் குழு அல்லது உருவகத்துக்குச் சொந்தமான அல்லது அவற்றால் சொந்தங்கொள்ளப்பட்ட அல்லது வைத்திருக்கப்பட்ட எல்லா நிதியங்கள், ஏனைய நிதிசார் சொத்துகள் மற்றும் பொருளாதார வளங்கள் என்பவற்றை இக்கட்டளை மூலமாக முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் திகதிய 2335/35ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானியில், 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 03 ஆம் திகதிய 2387/03ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் மற்றும் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதிய 2424/52 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2012 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க, ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்குவிதிகளின் 05 ஆம் ஒழுங்குவிதியின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளைகள், அதன்கீழ் செய்யப்பட்ட எதற்கும் பங்கமின்றி இத்தால் இல்லாதொழிக்கபபடுவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா குறித்த வர்த்தமானியில் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.
2438/47 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானியின் பிரகாரம், தமிழீழ விடுதலைப் புலிகள, தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்று அறியப்படுகின்ற டீ.சீ.சீ.பிரான்ஸ், உலக தமிழர் இயக்கம் என்று அறியப்படுகின்ற டபிள்யூ.டீ.எம், நாடு கடந்த தமிழீழ அரசு என்றும் அறியப்படுகின்ற டீ.ஜீ.டீ.ஈ, டபிள்யூ.டீ.ஆர்.எவ். என்றும் அறியப்படுகின்ற உலகத் தமிழர் நிவாரண நிதியம், எச்.கியூ என்றும் அறியப்படுகின்ற தலைமையகக் குழு, NTJ என்று அறியப்படும் தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பு, JMI என அறியப்படும் ஜமாதே மிலாதே ஈப்ராஹிம், டபிள்யூ.ஏ.எஸ். என்று அறியப்படும் விலயாத் அஸ் செயிலான, க.த.தே.அ. என் அறியப்படுகின்ற கனேடிய தமிழர் தேசிய அவை, டி.வை.ஓ. என்றும் அறியப்படுகின்ற தமிழ் இளைஞர் அமைப்பு, டருள் ஆதர் அத்தபவியா மற்றும் எஸ்.எல்.ஐ.எஸ்.எம். என்றும் அறியப்படுகின்ற இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் ஜாமியா, சேவ்-தி-பேர்ள்ஸ் ஆகிய அமைப்புகளின் சொத்துகள் மற்றும் நிதியங்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
0 Comments