Ticker

6/recent/ticker-posts

பிரான்ஸில் கருணைக் கொலை மசோதா நிறைவேற்றம்.

கருணைக் கொலை செய்வதற்கு அனுமதிக்கும் மசோதா, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் பாராளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

 


வலி மிகுந்த, நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை, எந்தவித சிகிச்சையாலும் காப்பாற்ற முடியாது என்ற நிலையில், உயிரை மாய்த்துக் கொள்வதற்கு அனுமதிக்கும் கருணைக் கொலை, உலகமெங்கும் பெரும் விவாதப் பொருளாகவே உள்ளது.

 


கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் சட்டம், சுவிட்சர்லாந்து மற்றும்  அமெரிக்காவின் பல மாகாணங்களில் நடைமுறையில் உள்ளன.

 


நெதர்லாந்து, ஸ்பெயின், போர்த்துக்கல், கனடா, அவுஸ்திரேலியா, கொலம்பியா, பெல்ஜியம், லக்சம்பர்க் போன்ற நாடுகள், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கருணைக் கொலை செய்ய அனுமதிக்கும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளன.

 


இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரான்ஸிலும், கருணைக்கொலைக்கு அனுமதி வழங்கும் கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.

 

 


கடந்த, 2023ல் இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில், இச்சட்டத்துக்கு மக்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், சில நிபந்தனைகளுடன் கருணைக் கொலைக்கு அனுமதி வழங்கும் மசோதா, பிரான்ஸ் பாராளுமன்றத்தின்  கீழ் சபையான நேஷனல் அஸெம்பிளியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.



இதற்கான மசோதாவுக்கு ஆதரவாக 305 வாக்குகளும், எதிராக 199 வாக்குகளும் பதிவாகியுள்ளன.



குறித்த மசோதா, அடுத்ததாக செனட் சபைக்கு அனுப்பப்படும். அங்கு ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால், இதில் சட்டத்திருத்தம் கோரப்படுமென்று தெரிகிறது.



எனினும், செனட்டை விடவும் நேஷனல் அஸெம்பிளியே அதிகாரம் மிக்கதாகும். அதனால், மசோதா சட்டமாவதில் பிரச்னை இருக்காது என்று கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments