தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வது குறித்த இறுதி முடிவு 2029 இல் எடுக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்ததையடுத்து, அது மிகவும் தாமதமானது என்று இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவிக்கையில், குழந்தைகள் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும் இப்பரீட்சை பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருவதாகவும், அதனை மாற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் மேலும் இழுத்தடிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
"இந்த வகையான போட்டி மிகுந்த தேர்வு குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதாகவோ அல்லது நிலையானதாகவோ இல்லை என்பதுடன் இது கடந்த காலங்களில் நிறைய பேசப்பட்டது.
முந்தைய அரசாங்கங்கள்கூட இதனை ஒப்புக்கொண்டு 2023 இல் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் ஒரு மாற்றீட்டை முன்மொழிந்தன. ஆனால் இப்போது இந்த அரசாங்கம் அதனை ஒத்தி வைத்துள்ளது." என்று பெர்னாண்டோ தெரிவித்தார்.
புலமைப்பரிசில் தேர்வின் அசல் நோக்கம் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் நன்கு அறியப்பட்ட பள்ளிகளில் சேர்வதற்கு உதவுவதே தவிர, அவர்களின் ஒட்டுமொத்த கல்வி வளர்ச்சியை ஆதரிப்பதல்ல என்றும் அவர் மேலும் கூறினார். "இது குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டதொரு அமைப்பு அல்ல. இது ஒரு பிரபலமான பள்ளியில் நுழைவதற்கான ஒரு வழியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, 2029 வரை முடிவை தாமதப்படுத்துவது நல்லதல்ல."
இந்த வாரத்தின் தொடக்கத்தில், கல்வி மற்றும் உயர்கல்வி துணை அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன, ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வைத் தொடரலாமா? வேண்டாமா? என்பது குறித்து இந்த பிரச்சினையை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கை மற்றும் மாணவர் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான பரிந்துரைகளை வழங்கிய பின்னர் 2029 இல் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
0 Comments