அப்பா அம்மா, எனது உலகமே நீங்கள் இருவரும்தான், எனது எதிர்காலம் குறித்து எத்தனை கனவுகளை வைத்திருந்தீர்கள்; அதற்காக அத்தனையையும் செய்தீர்கள்.
நான் உங்களுக்கு ஆறாத் துயரத்தை தருவதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள். எனது கணவன் கவினும் அவனது பெற்றோரும் என்னை மனதளவிலும் உடலளவிலும் துன்புறுத்துகிறார்கள்.
நான் பொய் சொல்லவில்லை, என்னை நம்புங்கள், எனக்கு ஆறுதல் அறிவுரை சொல்பவர்கள், அனுசரித்து வாழ். இதெல்லாம் சரியாகி விடும், வாழ்வில் இன்னும் எவ்வளவோ நல்ல திருப்பங்களை காண வேண்டியுள்ளது, தைரியமாக பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
ஆனால், மனதளவிலும் உடலளவிலும் நொடிந்து கோழையாகிவிட்ட எனக்குள் பயம் அதிகரித்து விட்டது, எனக்கு இனிமேலும் தாக்குப் பிடிக்க சக்தி இல்லை, நான் போகிறேன்.
கோவில், ஜாதகம், சாஸ்திரம் எதுவும் இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு தரப் போவதில்லை என்பதை நான் நன்கு புரிந்து கொண்டேன்.
இது எனது தலையெழுத்து, அதன் பிரகாரமே நடக்கட்டும். நீங்கள் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு தொடர்ந்தும் சுமையாக வலிகள் தகுவதற்கு நான் விரும்பவில்லை!
இந்த வாழ்வு சரிப்படாவிட்டால் இன்னொரு வாழ்வு அமையும் என்று சொல்கிறார்கள், அது அப்படியல்ல என்னைப் சொறுத்தவரை ஒருவனுக்கு ஒருத்திதான், ஒருவனுடன் வாழ்ந்த பிறகு மற்றொருவருக்கு வாழ்க்கைப்படுவதற்கு மனதளவிலும் உடலளவிலும் திராணியுடைவள் இல்லை.
நான் இந்த உலகத்தை விட்டு போகிறேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்..
இது வரதட்சணை கொடுமையால் விளைந்த தமிழ்நாட்டை உலுக்கிய பெரும் விபரீதம், கவின் எனும் கயவனுக்கு தரப்பட்ட 100 பவுன் தங்கமும் வோல்வோ ரக ஜீப் வண்டியும் மற்றும் சீர்வரிசைகளும் போதாதென்று மணமகளை அவனும் அந்தக் கயவனை ஈன்றெடுத்த தாய் தந்தையும் செய்த கொடுமைகளின் விளைவு.
அந்த சகோதரி ரிதன்யா தனது குரல்பதிவின் இறுதியில் தன்னிடம் இறுதியாக எஞ்சியிருந்த சில நகைகளை ஒரு தொகைப் பணத்தை தன் பெற்றோருக்காக பாதுகாப்பாக விட்டுச் செல்லும் விபரங்கள் குறித்தும் கூறியுள்ளார்.
இதில் சில படிப்பினைகள் இருக்கின்றன:
வழமையான வரதட்சணை, சீதனம் சீர்வரிசை எனும் சமூக அநீதி, கொடுமை அதுபற்றி அதிகமதிகம் பேசப்படுவதால் அதனை விட்டுவிடுவோம். கொடுமை தாங்க முடியாமல் வீட்டுக்கு திரும்பி வந்த மணமகள் திருப்பி வற்புறுத்தி அனுப்பப்பட்டமை தெரிகின்றது.
அவரது மனநிலை பாதிக்கப்பட்டு மன அழுத்தம் உச்ச கட்டத்தில் இருந்திருப்பது தெரிகின்றது.
சடங்கு சம்பிரதாயம், ஜாதகம் சாஸ்திரங்களை அதிகம் நம்பி அறிவுபூர்வமாக சிந்திக்கத் தவறியிருக்கின்றமை புரிகின்றது.
இது என் தலை எழுத்து, அப்படியே ஆகட்டும் என்று நினைப்பதும் வாழ்க்கைப் போராட்டத்திற்கு முகம் கொடுக்கத் தயங்குகின்ற மூட நம்பிக்கையாகும்!
ஒருவனுக்கு ஒருத்தி, உடன்கட்டை ஏறுதல் என்ற பழைய மூட நம்பிக்கைகளை அறிவார்ந்த சமூகங்கள் இன்னும் கொண்டிருக்கின்றமையாகும்.
திருமணத்திற்கு முன்னரும் பின்பும் மணமக்களுக்கு குறிப்பாக இவ்வாறான பிரச்சினைகளின் போது உளவள ஆலோசனைகள் தரப்பட வேண்டும்.
ஒரே ஒரு முறை தரப்படும் வாழ்வில் பிரச்சினைகள் சவால்கள் இருப்பதற்காக உயிரை மாய்த்துக் கொள்ளல் தீர்வாக மாட்டாது என்பது பற்றிய விழிப்புணர்வு இளம் சந்ததியினர் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
பணம் பொருள் என்று பொருள் முதல்வாத பெறுமானங்களுக்கப்பால் அன்பு, அறம், ஆன்மீகம், மனித நேயம் எனும் உயரிய மானுட விழுமியங்கள் பற்றிய புரிதல் புதிய தலைமுறைகள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
பெரிய இடங்களை தேடி பக்குவமற்ற பக்காத் பகற்கொள்ளையரிடம் பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளைகளை பலி கொடுத்து விடல் ஆகாது.
இனி, மற்றுமொரு ரிதன்யா உருவாகாமல் இருப்பதை உறுதி செய்வதே இப்போது அவருக்குச் செய்யும் இறுதிக் காரியமாக இருக்க வேண்டும்.
இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் இந்த வரதட்சணை சீதனம் சீர்வரிசைக் கொடுமைகளுக்கு சமூக அநீதிகளுக்கு பால்ரீதியான பாகுபாடுகளுக்கு பெண்களும் அவர்களைப் பெற்றவர்களும் முகம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
அவரை இழந்து தவிக்கும் பெற்றோர் உறவினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்
0 Comments