இன்றிலிருந்து 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை யாசகம் எடுப்பது, வர்த்தகம் செய்தல் மற்றும் 16 தொடக்கம் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வீட்டு வேலைகள் உள்ளிட்ட ஆபத்தான வேலைகளில் பணியமர்த்துவதை முற்றிலுமாக தடை செய்யும் தற்போதைய சட்ட விதிகளை கடுமையாக செயற்படுத்த அமைச்சரவை அண்மையில் அனுமதியளித்தது.
2022 ஆம் ஆண்டு 39 ஆம் இலக்கம் கொண்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் (திருத்தம்) சட்டத்தின்படி, 18 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்களாகக் கருதப்படுகின்றனர். மேலும், 16 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் கட்டாயக் கல்வி அவசியமாக்கப்படுகின்றது.
16 வயதுக்குட்பட்ட சிறுவர் பாடசாலைக்கு செல்லவில்லையென்றால் அதனை எதிர்க்க சட்ட விதிகள் உள்ளன, மேலும், இச்சட்டம் இன்று முதல் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என சிறுவர்கள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது வலியுறுத்தினார்.
தெருக்களில் யாசகம் எடுக்கின்ற, வர்த்தகம் செய்கின்ற, அபாயகரமான வேலைகளில் ஈடுபடும் அல்லது வேறு ஏதேனும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கும் அனைத்து சிறுவர்களும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபையின் 1929 சிறுவர் ஆதரவு சேவை, சிறுவர்கள் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் 109 அவசர அழைப்பு சேவை, நாட்டிலுள்ள எந்தவொரு பொலிஸ் நிலையத்திற்கும் அல்லது மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் கள அதிகாரிகளுக்கும் தெரிவிக்குமாறும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் விவகார அமைச்சு வேண்டியுள்ளது.
0 Comments