முபஸ்ஸில் – அந்தப் பெயரைச் சொன்னால் பாடசாலை பையன்கள் சிரித்துவிடுவார்கள். "அந்த பேதையா?" என்பதே பதிலாக வரும். ஆனால் அந்த 'பேதை' என்ற பெயருக்குள் யாரும் அறியாத ஒரு உணர்வுப் புண்ணும், உல்லாசமாய் பறந்த கனவுகளும் இருந்தன.
முபஸ்ஸில் ஒரு சின்ன கிராமம், அண்ணல் நகரின் ஒற்றை மழைக்கால பஞ்சாயத்து சாலை ஓரம் இருக்கும் கூரையில்லா வீட்டில் வளர்ந்தவன். தந்தை இறந்துபோனதற்குப் பிறகு, தாய் ரிசாயா, குடும்பத்தை நடத்த குவைத் சென்றிருந்தார். அவருடைய அனுப்பும் பணம் மாதந்தோறும் சில நாட்கள் தாமதித்தும் வந்துவிடும். ஆனால் அந்த உழைப்புப் பணத்தில் முப்பதாம் நாள் இரவில் நெத்தலிக்கருவாடும் தேங்காயும், அரிசியும் வாங்கி, அடுத்த மாதம் தொடங்கி விடுவான் முபஸ்ஸில்.
முப்பதாம் நாள் மட்டுமல்ல; ஒவ்வொரு நாளும் தன் வாழ்வின் முனையமேது என்று புரியாத குழப்பத்துடன் இருந்தான். அவன் நிழல் போல வாழ்ந்தது. பள்ளியில், பலவீன மாணவன்; வீட்டில், சுமையாய் கருதப்படும் சிறுவன்; தெருவில், வெறும் காலசக்கரம் தேடிக்கொண்டு அலையும் உலர்ந்த பாதம்.
அவனுக்குள் இருந்த ஒற்றை ஆசை – எங்கேயாவது மாறவேண்டும்.
தாயுடன் பேசும் வாரம் ஒருமுறை வாட்ஸ்அப்பில், சத்தமில்லாமல் கதறும். "உம்மா, எனக்கொன்னும் புரியலை... என் வாழ்க்கை ஏன் இப்படி?"
தாய் பதிலளிக்க மாட்டார். அவர் ஒவ்வொரு வாரமும் சொல்வது இதுதான் –
"நல்லா படி,படிச்சு வேலைக்கு போய்டு... எனக்கு பிடிச்சி நல்ல மனுஷனா இரு... உன் வாப்பா போன இடத்தை நிமிர வை!"
முபஸ்ஸிலின் அருகில் யாரும் இல்லாத இடத்தில், தனது பைனோட்டில் கவிதைகள் எழுதுவான்.
“நான் ஒரு காற்று – எங்கு செல்கிறேன் என தெரியாது,
என்னை தள்ளுபவர் பலர் – ஆனால் என்னை அழைப்பவர் யாரும் இல்லை...”
ஒரு நாள் அவன் அந்த கவிதையை நண்பன் பிலால் பார்வைக்கு அனுப்பினான். பிலால் அதை கல்லூரி நிகழ்ச்சிக்குப் போட்டிக்காக அனுப்பிவிட்டான். அதுவே திருப்புமுனை. அந்தக் கவிதை மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றது.
முபஸ்ஸில் வெறுமனே அதிர்ச்சி. கவிதை எழுதினால் பரிசு கிடைக்கும் என்ற வரைக்கும் அவனது வாழ்கை வரலாறேலையே எழுதப்பட்டிருக்கவில்லை.
பிலால் சொன்னான்: "மச்சான், நீயே உன்னைப் பற்றி தெரியாம பெரிய கவிஞன்டா நீ ! பேதையா இல்லை பாரு... கவியாசிரியர் முபஸ்ஸில்!"
அந்த வாரம் முழுக்க, முப்பதாம் தேதி வந்ததற்கும் முன்னர் அவனது முகத்தில் புன்னகை வந்திருந்தது. அவன் எழுதியதை ஆசிரியர்கள் பாராட்டினர். தந்தையின்றி வளர்ந்தவனாக அவன் மனத்துக்குள் சுமந்த பஞ்சங்கள் திடீரென கவிதையாக உருகின.
பாடசாலை மாணவக் கவிதை மாநாட்டில் பேச அழைக்கப்பட்ட முபஸ்ஸில், தனது முதல் பேச்சில் இவ்வாறு தொடங்கினான்:
"இங்கு பேச வருவதற்கு முன், பல இரவுகள் தூங்காமல் தவித்தேன். எனக்கு ஒரு மேடை வேண்டும் என்றில்லை,
ஒரு மின்விளக்கின் கீழ் தூங்கி விட்ட ஒரு கனவுக்கூட போதும் என்று எண்ணியிருந்தேன்.
நான் எந்த வயதில்தான் பசிக்காக அழுதேன் என்று நினைவில்லை.
ஆனால் மனதுக்காக அழுத நாட்களை மட்டும் மறக்க முடியவில்லை. என் தந்தை இறந்தபோது என் வயது பத்தும் இல்லை.
அப்போது வாழ்க்கை என்னவென்று எனக்குத் தெரியாது, ஆனால், அதிலிருந்து ஓட வேண்டும் என்ற உணர்வு மட்டும் தெரிந்தது.
என் தாய் – இன்று மத்திய கிழக்கில் ஒரு வீடுகளில் தாயாக இல்லாமல்,
பணிப்பெண்ணாக இருக்கிறார்.. நான் எழுத ஆரம்பித்ததும் – அதுவே என் கதறல் ஆனது. கவிதை எழுதினேன்... ஆனால் யாரும் கவனிக்கவில்லை.
ஒரு நண்பன் படித்து, 'இதோ, நீ உன் திறமையை உனக்குள்ளேயே வைத்திருக்க கூடாது என என்னை வெளியே இழுத்தான்.
இன்று என் பெயரை நீங்கள் அழைக்கிறீர்கள். 'முபஸ்ஸில்' என நீங்கள் சொல்வது ஒவ்வொரு முறையும் –
'நீ இன்னும் வாழ வேண்டியவன்' எனது தந்தையின் குரலாய் எனக்கே கேட்கிறது.
இந்த மேடையில் நான் பேசுவது, வெறும் ஒரு பரிசுக்காக அல்ல –
என் வாழ்க்கை ஒரு தவறாக இல்லை என நிரூபிக்க."
அங்கிருந்த அனைவரும் மௌனமாகக் கேட்டனர். அவனது வார்த்தைகளில் களத்தில் நின்ற அனைவராலும் அவனது காயங்களை உணர முடிந்தது.
அவனது கதையை நிருபர்கள் எழுதி அனுப்பினர். “பேதை என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிய நாள்” என்ற தலைப்பில் செய்தி வந்தது.
அடுத்த வாரம், அவனது தாயின் குரலில் பெருமிதம் அதிகம். “என் மகன் என் மகன்!” என்றாள்.
அந்த வெற்றியிலிருந்து முபஸ்ஸில் பின் வாங்கவில்லை. கவிதைகளுடன் கட்டுரைகள், சிறுகதைகள், பின்னர் சுயசரிததைகள்... அவனின் எழுத்தில் ஊரின் வாடையும், தாயின் துக்கமும், தந்தையின் மரணமும், பால்யத்தின் ஏக்கம் அனைத்தும் கலந்தன.
முபஸ்ஸில் ஒரு நாள் மத்திய கிழக்கு நாட்டுக்கே ஒரு இலக்கிய மாநாட்டுக்காக அழைக்கப்பட்டான். தாயை சந்தித்தான். அவர்கள் கண்ணீர் சிந்த, மௌனமாகக் கையில் ஒரு பத்திரிகையை எடுத்துக் காட்டினார் – அதன் முன்னுப் பக்கத்தில் ‘தடம் மாறிய பேதை – கவிஞர் முபஸ்ஸில்’ என்ற தலைப்பு.
அவளது கண்கள் சொல்கின்றன: "நீ பாதையை தேடியதே இல்ல... பாதைவே உன்னைத் தேடி வந்தது.”
இப்போதெல்லாம் பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் வாசிப்பு விழாக்களில் முதலாவது பேச்சாளர் முபஸ்ஸில் தான். அவனது முகத்தில் புதிதாக விளைந்த விழிக்கதிர்கள். வெறும் ஒரு கவிதை அல்ல – வாழ்வின் வரலாற்றை கவிதையாக மாற்றிய பையன்.
முபஸ்ஸில் ஒருபோதும் தன்னை கவிஞனாக நினைத்ததில்லை.
அவன் நினைத்தது வெறும் ஒரு பக்கம் கவலை எழுதி மனம் சலித்துவிட வேண்டும் என்பதுதான். ஆனால், உலகம் அதை ‘இனிய கவிதை’ எனக் கருதியது.
ஒரு நாள் கடைசி வருடத்திலுள்ள மாணவன் அவனை அணுகி கேட்டான்:
"நானா... நான் பயப்படுகிறேன். என் வாழ்க்கையிலதான் ஒன்னும் நடக்காது போலிருக்கு..."
முபஸ்ஸில் அவனை அழைத்துக்கொண்டு பள்ளி வாசலின் விளக்கின் கீழ் உட்கார வைத்து சொன்னான்:
"நீ சொல்றது சரிதான். வாழ்க்கை எல்லாம் உனக்கே எதிராக இருப்பது போலத்தான் இருக்கும்...
ஆனால், அந்த எதிர்மறைதான் உனக்கு உரிமை.
எழுதத ஆரம்பி. பேதைன்னு நெனச்சவங்களுக்கு, நீதான் பாதை காட்டவேண்டியது!"
தடம் மாறிய பேதை – வாழ்க்கை நடந்து வந்த பாதையில் நின்று, தன்னைத் தானே மீட்டவன்.
அவனின் பேதைத்தனமே தான் அவனை மின்னும் நிழலாக்கியது.
வில்வெளி
கிண்ணியா.
0 Comments