பாதுகாப்பு முகாம்களாகப் பயன்படுத்தப்படுகின்ற பாடசாலைகள் மற்றும் தொடர்ந்தும் அபாய நிலையிலுள்ள பாடசாலைகளைத் தவிர, ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் டிசம்பர் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன் நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7,000 பேர் தங்கியுள்ள நிலையில், அவர்களை 02 அல்லது 03 மாதங்களுக்குள் மீளக் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையில், பகுதியளவில் சேதமடைந்த வீடுகளில் ஆபத்து இல்லை என்று கண்டறியப்பட்டால் அவர்களை மீண்டும் அவர்களின் வீடுகளிலேயே மீள் குடியேற்ற முடியுமா? என்பது குறித்து ஆராய்ந்து அதற்கான பணிகள் விரைவுபடுத்தப்படும்.
அதேபோல், வீடுகளை முழுமையாக இழந்தவர்களை குடியமர்த்துவதே தற்போதுள்ள பிரதான சவால் ஆகும். அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள விசேட வேலைத்திட்டத்தை விரைவாகச் செயற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மண்சரிவு அல்லது அனர்த்தங்களுக்கு முகங் கொடுத்தவர்களை குடியமர்த்துவதற்கு பொருத்தமான அரச காணிகள் குறித்த தகவல்களை வழங்குமாறும் அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு முகாம்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் மற்றும் தொடர்ந்தும் அபாய நிலையிலுள்ள பாடசாலைகளைத் தவிர, ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் 2025 டிசம்பர் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
நிவாரண உதவிகளைப் பகிர்ந்தளிப்பதில் அல்லது அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் மக்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் காணப்பட்டால் 1904 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்துத் முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

0 Comments