இன்று (25) கிறிஸ்துமஸ் தினத்தில் உலகம் அழியப் போவதாகக் கூறி மேற்கு ஆப்பிரிக்கா முழுவதும் பெரும் பீதியை கிளப்பிய கானா நாட்டு மதபோதகர் எபோ நோவா (Ebo Noah), தற்போது "உலக அழிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்று உலகம் அழியாதது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளி (Video) செய்தியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:
"கடவுள் உலகத்தை அழிக்கத் தீர்மானித்திருந்தார். ஆனால், நான் கடவுளிடம் மண்டியிட்டு, அழுது மன்றாடினேன். மனித குலத்திற்கு இன்னும் ஒரு சந்தர்ப்பம் வழங்குமாறும் கோரிக்கை விடுத்தேன். எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட கடவுள், தன்னுடைய கோபத்தைத் தணித்துக் கொண்டு உலக அழிவை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளார்."
போதகரின் குறித்த முரண்பட்ட அறிவிப்பு, அவரை நம்பிச் சென்ற ஆயிரக்கணக்கான பொதுமக்களை கடும் அதிர்ச்சியிலும், விரக்தியிலும் ஆழ்த்தியுள்ளது.
உலகம் அழியப் போகிறது எனும் அச்சத்தில், பலரும் தங்கள் வீடுகள், நிலங்கள், கால்நடைகள் மற்றும் வாகனங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை விட்டு, போதகர் அமைத்திருந்த 'பாதுகாப்பு கப்பல்' பகுதிக்குச் சென்றிருந்தனர்.
தற்போது உலகம் அழியாததாலும், அழிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுவதாலும், சொத்துக்களை இழந்த மக்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் நிர்க்கதியாகி நடுத்தெருவில் நிற்கும் நிலைமை உருவாகியுள்ளது.
இது மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்கான ஒரு திட்டமிட்ட நாடகம் என்று பகுத்தறிவாளர்களும், ஏனைய மதத் தலைவர்களும் கடுமையாகச் சாடியுள்ளனர்.
உலகம் அழியாது என்பது உறுதியானதும், போதகர் பொதுமக்களின் கோபத்திலிருந்து தப்புவதற்காகவே "கடவுள் மனமாறி விட்டார்" எனும் புதிய கதையைக் கூறுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சொத்துக்களை இழந்து பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த போதகருக்கு எதிராகப் பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு தயாராகி வருவதாக அங்கிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments