கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மற்றும் கிண்ணியா பிரதேச செயலகம் இணைந்து நடத்திய பிரம்மாண்டமான 'கிழக்கின் பாரம்பரிய மரபுரிமைக் கண்காட்சி' நேற்று (23) கிண்ணியா மத்திய கல்லூரி அப்துல் மஜீத் மண்டபத்தில் நடை பெற்றது.
இந்நிகழ்வில் பண்டைய பொக்கிஷங்கள், முன்னோர்கள் பயன்படுத்திய அரிய பொருட்கள் மற்றும் ஆவணங்களின் காட்சிப்படுத்தல்கள் இடம் பெற்றன. மேலும் சீனடி, கஸீதா, பறை நடனம், செம்பு நடனம், பரதநாட்டியம், கோலாட்டம், கண்டிய நடனம் உள்ளிட்ட பல்லின கலாசார கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன. பாரம்பரிய உணவுகளும் சிறப்பாக அணிவகுத்தன.
கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி மோகனா புவிக்குமார் தலைமையேற்ற இந்நிகழ்வில், கிண்ணியா பிரதேச செயலாளர் எச்.எம். கனி மற்றும் கிண்ணியா மத்திய கல்லூரி அதிபர் எம்.எச்.எம். நஜாத் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் திரளாகக் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பாட்டாளர்கள் நன்றியை தெரிவித்தனர்.



0 Comments