சீனாவிலுள்ள கிராமம் ஒன்றில் திருமணம் தொடர்பான விடயங்களில் பல அபராதங்களை அறிமுகப்படுத்தியுள்ளமை விவாதங்களைத் தூண்டியுள்ளது.
தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தின் லிஞ்சங் என்ற கிராமத்தில் வித்தியாசமான விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இணையத்தள பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்ட புகைப்படங்களின் பிரகாரம், திருமணமாகாமல் கர்ப்பம் தரித்தல், திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்தல் மற்றும் யுன்னான் மாகாணத்திற்கு வெளியே இருந்து ஒருவரை திருமணம் செய்வது போன்றவற்றுக்கு கடுமையான தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
திருமணம் தொடர்பான நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாகாணத்திற்கு வெளியேயுள்ள ஒருவரைத் திருமணம் செய்தால் 1,500 யுவான் (210 டொலர்கள்) அபராதம் விதிக்கப்படும்.
திருமணம் செய்யாமல் கருவுற்றால் 3,000 யுவான் அபராதம்; திருமணம் ஆகாத தம்பதிகள் ஒன்றாக வாழ்ந்தால் வருடம் தோறும் 500 யுவான் (70 டொலர்கள்) செலுத்த வேண்டும்.
திருமணமான 10 மாதங்களுக்குள் ஒரு குழந்தை (விரைவாக குழந்தை பிறந்தால்) 3,000 யுவான் அபராதமாக விதிக்கப்படும்.
ஒரு தம்பதியினர் சண்டையிட்டு, சமரசம் செய்ய கிராம அதிகாரிகள் யாரேனும் அழைக்கப்பட்டால் ஒவ்வொருவருக்கும் 500 யுவான் அபராதமாக விதிக்கப்படும்.
மற்ற கிராமங்களில் மது அருந்தும்போது தொந்தரவு செய்பவர்கள் அல்லது முரட்டுத்தனமாக நடந்து கொள்பவர்களுக்கு 3,000 தொடக்கம் 5,000 யுவான் (700 டொலர்கள்) வரை அபராதம் விதிக்கப்படும்.
அதேபோன்று, கிராமத்திற்குள் வதந்திகளைப் பரப்புபவர்கள் அல்லது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் தெரிவிப்பவர்கள் பிடிபட்டால், அவர்களுக்கு 500 முதல் 1,000 யுவான் வரை அபராதம் விதிக்கப்படும்.
அக்கிராமத்தின் மக்கள் தொகை அளவு மற்றும் பொருளாதார நிலை ஆகியவை தெளிவாக தெரியவில்லை.
எனினும், மெங்டிங் நகர அரசாங்கத்தின் அதிகாரியொருவர் ரெட் ஸ்டார் நியூஸிடம், குறித்த அறிவிப்பின் உள்ளடக்கம் "மிகவும் அசாதாரணமானது" என்றும், அது பின்னர் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அறிவிப்பு கிராமக் குழுவால் தன்னிச்சையாக வெளியிடப்பட்டதென்றும், அது குறித்து நகர அரசாங்கத்திடம் தெரிவிக்கவோ அல்லது ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கவோ இல்லையென்றும் அவர் மேலும் விளக்கினார்.

0 Comments