Ticker

10/recent/ticker-posts

புதிய கல்வி ஆண்டு: தரம் 01 மற்றும் 06 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் ஆரம்ப திகதிகள் அறிவிப்பு

புதிய கல்வியாண்டு நேற்று (05) ஆரம்பமான நிலையில், தரம் 01 மற்றும் தரம் 06 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் திகதிகளையும் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.

கடந்த 04 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்படி,

தரம் 06 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் 2026 ஜனவரி 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

தரம் 01 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் 2026 ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில், மாணவர்களை புதிய முறைக்கு பழக்கப்படுத்துவதற்கான விஷேட திட்டங்களும், பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, புதிய பாடத்திட்டத்தை வகுப்பறையில் நடைமுறைப்படுத்தும் ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர்  குறிப்பிட்டார். இதுவரையில் 7,181 பயிற்சியாளர்கள் மூலம் 132,580 ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய பாடத் தொகுதிகள் (Modules) தொடர்பான பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களில் 93 சதவீதமானோருக்கான பயிற்சிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், புதிய கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை பாடசாலைகளுக்கு வழங்குவதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments