சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி மற்றும் தசுன் சானக்க தலைமையிலான இலங்கை அணிக்கும் இடையிலான 03 போட்டிகள் கொண்ட T20 சர்வதேச தொடர் இன்று (07) தம்புள்ளையில் இரவு 7.00 PM மணிக்கு ஆரம்பமாகிறது.
பெப்ரவரி 10 ஆம் திகதி ஆரம்பமாகும் ICC T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான ஆயத்தமாகும் நோக்குடன் 10 ஆண்டுகளின் பின்னர் இலங்கை மண்ணுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இரு தரப்பு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியினர் இலங்கை கிரிக்கெட் அணியுடன் 03 போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஆடுகிறது.
10 ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் T20 ஆடும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் அணி கடந்த 2023 இல் இறுதியாக டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இலங்கைக்கு வந்திருந்தாலும், 2015 இல் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கை மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதையடுத்து தற்போது 10 வருடங்களின் பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்காக இலங்கை வந்துள்ளது. T20 தொடரின் போட்டிகள் 07, 09 மற்றும் 11 ஆம் திகதிகளில் தம்புள்ளையில் நடைபெறவுள்ளது.
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நேருக்கு நேர்
இதுவரையிலான போட்டிகள் கடந்த 2007 இல் இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் முதலாவது T20 சர்வதேச போட்டி நடைபெற்றது. அன்று தொடக்கம் இன்று வரையில் இரண்டு அணிகளுக்கிடையில் 27 T20 சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி 16 போட்டிகளிலும், இலங்கை அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஒரு மாத இடைவெளியின் பின் மீண்டும் மோதல்
இரண்டு அணிகளும் இறுதியாக கடந்த நவம்பரில் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற முத்தரப்பு T20 சர்வதேச தொடரில் மோதியிருந்தன. இறுதிப் போட்டியில் இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் பாகிஸ்தான் 06 விக்கெட்களால் வெற்றி பெற்று தொடரை வென்றது. அதன் பின் தற்போது இரண்டு அணிகளும் ஒரு மாத இடைவெளியின் பின்னர் மீண்டும் மோதுகின்றன.
இறுதி பத்து ஆட்டங்கள்
இரண்டு அணிகளும் கடைசியாக மோதிய 10 T20 ஆட்டங்களில் இலங்கை அணி 06 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 04 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. எனினும் இரண்டு அணிகளும் கடந்த ஆண்டில் மோதிய 04 ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி மூன்றில் வெற்றியீட்டியுள்ளது. இலங்கை மண்ணில் இரண்டு அணிகளும் 06 ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி 04 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகின்றது.
இருதரப்பு தொடர்கள்
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இதுவரையில் 07 இருதரப்பு T20 சர்வதேச தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி 04 தொடர்களை வென்றுள்ள நிலையில், இலங்கை அணி ஒரேயொரு தொடரை மட்டும் வென்றுள்ளது. இரண்டு தொடர்கள் 1-1 என்ற சமநிலையில் நிறைவுக்கு வந்துள்ளன.
2019 ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு T20 சர்வதேச தொடரில் ஆடியதன் பின்னர் தற்போது இரண்டு அணிகளுக்குமிடையில் 06 ஆண்டுகளின் பின் முதல் முறையாக இருதரப்பு T20 தொடர் நடைபெறவுள்ளது. இறுதியாக நடைபெற்ற தொடரை இலங்கை அணி கைப்பற்றிய நிலையில் தற்போது மீண்டும் இலங்கை அணி இருதரப்பு தொடரை கைப்பற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். குறித்த தொடரானது அடுத்து நடைபெறவுள்ள ICC T20 உலகக் கிண்ணத் தொடருக்கான சிறந்த பயிற்சியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

0 Comments