புனித ரமழான் மாதத்தில் முஸ்லிம் அரச ஊழியர்கள் தமது மதக் கடமைகளை இலகுவாக நிறைவேற்றுகின்ற வகையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் நெகிழ்வுப் போக்கான பணி நேரத்தை (Working Hours) அறிமுகப்படுத்துமாறு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான விஷேட சுற்றறிக்கை அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட சபைகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்துக்கான ரமழான் நோன்பு பெப்ரவரி 19ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதி வரை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இக்காலப்பகுதியில் முஸ்லிம் ஊழியர்கள் நோன்பு நோற்பதற்கும் ஏனைய மத அனுஷ்டானங்களில் ஈடுபடுவதற்கும் ஏதுவாக பணி அட்டவணைகளை மாற்றியமைக்குமாறு உரிய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதக் கடமைகளுக்காக விஷேட விடுமுறைகளை வழங்குவதை விட, பணி நேரங்களைச் சீரமைப்பதன் மூலமாக தேவைகளை நிர்வகிக்குமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மாத்திரம் விஷேட விடுமுறைகளை அங்கீகரிக்குமாறு நிறுவனத் தலைவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச சேவையின் செயற்திறனைப் பாதிக்காத வகையில், ஊழியர்களின் மதச் சுதந்திரத்தை உறுதி செய்வதே இந்நடவடிக்கையின் நோக்கம் என்று சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments