உலகம் முழுவதும் பாரியளவிலான பெரும் வெள்ளம் ஏற்பட்டு அழிந்துவிடும் என்று சமூக வலைத்தளங்களில், மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தைப் பரப்பிய எவன்ஸ் எஷுன் (Evans Eshun) என்ற நபர் அண்மையில் கானாவில் கைது செய்யப்பட்ட்டார்.
இவர் இணையதளங்களில் 'ஈபோ நோவா' (Ebo Noah) எனும் பெயரில் தன்னை ஒரு தீர்க்கதரிசியாகக் காட்டி வந்துள்ளார்.
கடந்த நத்தார் பண்டிகைக்கு முன்னதாக உலகம் முழுவதும் பெரும் புயலும் வெள்ளமும் ஏற்பட்டு உலகம் அழியப் போவதாக எவன்ஸ் காணொளிகளை (Video) வெளியிட்டிருந்தார்.
எனினும், அவர் சொன்னது போன்று எதுவும் நடக்காத நிலையில், 'கடவுள் அந்த அழிவைத் தள்ளி வைத்துள்ளார்' என்று கூறி அடுத்த காணொளியையும் பதிவிட்டார்.
இவருக்கு எவ்விதமான மதப் பின்னணியோ அல்லது தேவாலயமோ கிடையாது என்றும், இவர் மதீனா பகுதியிலுள்ள ஒரு தனியார் பாடசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணிபுரிந்தவர் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவருடைய கருத்துக்களை நம்பி வெளிநாடுகளில் இருந்தெல்லாம் பொது மக்கள் கானாவிற்கு வந்துள்ளனர். அதேவேளையில் அவருடைய 'கப்பலில்' ஏறித் தப்பிப்பதற்காக லைபீரியாவிலிருந்து ஒருவர் நீண்ட தூரம் பயணம் செய்து கானாவிற்கு வந்துள்ளமை அதிகாரிகளை பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மக்களை முட்டாளாக்கி சமூக வலைத்தளங்களுக்காக வெறும் 'கண்டென்ட்' (Content) உருவாக்கவே தான் இவ்வாறு செய்ததாக எவன்ஸ் தற்போது தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தவறான தகவல்களைப் பரப்பி மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு மனநலப் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 Comments