Ticker

6/recent/ticker-posts

ஊர்களை வளப்படுத்த அதிகாரமிக்க சபைகள் திசைகாட்டிக்கு அவசியம்.

ஒவ்வொரு ஊரையும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு திசைகாட்டி அரசாங்கத்திற்கு இருக்கின்றது. சில பாதைகள் மென்மையானதாக இருக்கும்; சில பாதைகள் கரடுமுரடானதாக இருக்கும்; சில பாதைகள் வெட்டுக்கத்தியின் மீது நடப்பது போன்றும் இருக்கும். சில பாதைகளில் பயணத்தை தடுப்பதற்கான தீய சக்திகள் குவிந்து கிடக்கும். சில பாதைகளின் நுழைவாயில்கள் மூடப்படுகின்ற சந்தர்ப்பங்களும் இருக்கும். நாடு முழுவதும் உள்ளுராட்சி சபைகளின் அதிகாரம் இவ்வாறாகத்தான் அமைந்திருக்கிறது.


ஆனால், எல்லாப் பாதைகளும் சென்றடைகின்ற இலக்கு ஒன்றுதான். அவ்விடத்தில்தான் சாதாரண மக்களுக்கான அழகிய வாழ்வு காத்திருக்கின்றது. ஆனால், செல்லுகின்ற பாதைகள் காலங்காலமாக பழுதாக்கப்பட்டிருக்கின்றன; இடைமறிக்கப்பட்டிருக்கின்றன; அசுத்தப்படுத்தப்பட்டிருக்கின்றன. நேர்வழிப் பாதையில் பல குறுக்கு வழிகளும், கிடங்குகளும், கொள்ளைக்கூடங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பாதையின் அதிகாரம் அவற்றை கைப்பற்றியவர்களிடம் மாத்திரமே இருந்திருக்கின்றது.

எனவே, அவற்றைச் சரிசெய்ய அப்பாதைக்குள் எப்படியாவது நுழையத்தான் வேண்டும். நாம் சென்றடைய வேண்டிய இலக்கினை அடைய திடசங்கற்பம் கொள்ள வேண்டும். அர்ப்பணிப்பும் அவசியமாகின்றது. ஏனெனில், இங்குள்ள சட்டங்களும் திருத்தங்களும் பழமையானவை. பாரபட்சமிக்கவை. இவற்றை தவிர்க்க முடியாது என்பதையும் உணர வேண்டும். உணர்ச்சி வயப்படுதலுக்கு அப்பால் சென்று விஞ்ஞானரீதியாக தற்கால பூகோள அரசியலையும் விளங்கிக் கொள்ள வேண்டும். இப்புள்ளியில்தான் சந்தர்ப்பவாத அரசியலுக்கும் தந்திரோபாய அரசியலுக்குமான வேறுபாடு காணப்படுகின்றது. இலக்கினை அடைய சமயோசித புத்தியுடன் தந்திரோபாய அரசியலை தேர்ந்தெடுக்கத்தான் வேண்டும்.
செல்லுகின்ற பாதையைப் பொருத்து நமது மேனி சில நேரம் மணக்கலாம், சில நேரம் நாறலாம். இவ்வளவு காலமிருந்த பாதைகளின் தராதரத்தைப் பொறுத்தே அது அமைகின்றது. ஆகவே, குப்பைகளை அள்ளி வீசும் போது சில நேரம் நம் கைகளிலும் அழுக்குகள் அப்பிக்கொள்ளத்தான் செய்யும். அதற்காக கைகள் அழுக்குகளை நேசிக்கின்றனவென்று சொல்ல முடியுமா? அந்தக் கைகள் சுத்தப்படுத்துகின்றன.
காலம் தனித்துவமிக்கது; பெறுமதிமிக்கது. 05 ஆண்டுகளை இழப்பதென்பது, மக்களுக்கு முழுமையாக பணியாற்ற வாய்ப்பில்லாதிருப்பது என்பது இலக்கை சென்றடைய வேண்டிய காலத்தை தாமதப்படுத்தும். அதற்கான தார்மீக உரிமை எமக்கு கிடையாது. ஏனெனில், இந்நாட்டு மக்கள் திசைகாட்டியின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை, அவர்களின் கனவுகளை வெற்றிபெறச் செய்விக்க திசைகாட்டி பல சவால்களையும், சில சமயங்களில் அவப்பெயர்களையும் சுமந்தாக வேண்டியிருக்கிறது.
ஆனால், அவை காலத்தால் சரிசெய்யப்பட்டுவிடும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உழைக்கின்ற வர்க்கத்தில் ஒருவரைக்கூட கைவிட்டுச் செல்வதற்கான உரிமை எமக்குக் கிடையாது. அவர்கள் வெவ்வேறு கட்சிகளில், வெவ்வேறு பாசறைகளில் இருந்தாலும்கூட அவர்களை புறக்கணப்பதற்கான தார்மீக உரிமை எமக்கு கிடையாது.

எனவே, சவால்மிக்க இப்பயணத்தில் குற்றவாளிகள் ஒரு போதும் பாதுகாக்கப்பட மாட்டார்கள், விடுவிக்கப்பட மாட்டார்கள். மன்னிக்கப்பட மாட்டார்கள். விதைத்ததற்கேற்ற வினையை அறுவடை செய்ய அவர்கள் தயாராகத்தான் இருக்க வேண்டும்.

அது போன்று, கைப்பற்றப்பட்ட பாதைகளில் கிஞ்சித்தேனும் குற்றங்கள் நிகழ இடம் கொடுக்கவும் படாது. நமது இலக்கை சென்றடையும் வரை பயணம் இடைநிறுத்தவும் படாது; இதுதான் திசைகாட்டியின் வாக்குறுதியாகும்..

- சதீஸ் செல்வராஜ்

Post a Comment

0 Comments