முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்ப உறுப்பினர்களை கைதுசெய்ய வேண்டாமென்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்குமாறு வெளியான செய்திகளை நிராகரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க மகாநாயக்க தேரர்களின் உதவியினை நாடுகிறார் என்ற பொய்யான அறிக்கைகளைப் பரப்பும் நிலைக்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்காக தனது குடும்ப உறுப்பினர்களை பொய்யாக சிக்க வைப்பதற்கு பொலிஸார் மற்றும் நீதித்துறையை கூட அரசாங்கம் எவ்வாறு அரசியல்மயமாக்க முயற்சிக்கின்றது என்பதை இது காட்டுகிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தானும், தனது குடும்ப உறுப்பினர்களும் தொடர்ந்து அரசியல் விசாரணைகளை அச்சம் இன்றி எதிர்கொண்டதாகவும், அதற்காக சிறப்பு கவனம் அல்லது ஆதரவை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், நாட்டின் நீதித்துறை அமைப்பில் தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments