இந்தியாவின் தமிழகம், காட்டுமன்னார் கோயில் அருகே பட்டதாரி பெண்ணை கோவில் பின்புறமுள்ள வீட்டில் கழுத்தறுத்து கொலை செய்து விட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த தந்தையிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார் கோயில் அருகே மணலூர் ஊராட்சிக்குட்பட்ட T. மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன். கூலித் தொழிலாளியான இவருக்கு 02 மகன்கள் மற்றும் அபிதா (27) என்ற பட்டதாரியான பெண் பிள்ளை ஒருவரும் உள்ள நிலையில், குறித்த பெண்ணிற்கு வேறு ஒரு ஆண் நண்பருடன் காதல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு தந்தை அர்ஜுனன் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தொடர்ந்து அந்த இளைஞருடன் அபிதா பேசி வந்ததாக கூறப்படுகின்றது. மேலும், அபிதாவிற்கு பல்வேறு வரன்கள் பார்த்து வந்த நிலையில் அப்பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அர்ஜுனன் மீண்டும் தனது மகளுடன் சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற அர்ஜுனன், தனது மகள் அபிதாவை அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
கொலை செய்த பின்னர் அருகிலிருந்த பாத்திரத்தில் கையை கழுவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்று தற்போது காட்டுமன்னார் கோயில் பொலிஸ் நிலையத்தில் அர்ஜுனன் சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொலிஸாரின் விசாரணைக்கு பிறகு கொலைக்கான முழுமையான காரணம் குறித்து முழு பின்னணியும் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments