Ticker

6/recent/ticker-posts

1,756 பட்டதாரிகளுக்கு விரைவில் ஆசிரியர் நியமனம்.

புதிய சுற்று நிருபத்திற்கு ஏற்ப 1756 பட்டதாரி ஆசிரியர்கள் வடக்கு மாணத்தில் உள்வாங்கப்படவுள்ளனர். அவர்களுக்கான போட்டிப் பரீட்சையின் போது மாவட்ட ரீதியில் தேவைக்கேற்ப வெட்டுப் புள்ளிகளை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் (NPP) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவருடைய அலுவலகத்தில் சனிக்கிழமை (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த வாரம் உலக வங்கி பிரதிநிதிகளுடன் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கூட்டமொன்று இடம்பெற்றது.

அக்கூட்டத்தில் எங்களது அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக ஒரு பில்லியன் டொலர் நிதி உதவி வடக்கு - கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக ஒதுக்கப்படவுள்ளது. 

அந்த வகையில் இதனூடாக வடக்கு - கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற மக்களது பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது, கிராமிய பொருளாதார நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்தல், வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.

அதுமட்டுமல்லாமல், வவுனியா மாவட்டத்தைப் பொறுத்த வரையில் நீண்டகாலமாக குளங்கள், புனரமைக்கப்படாமலும், தூர் வாராமலும், பழுதடைந்தும் காணப்படுகின்றன. இதனை திருத்தியமைக்க வேண்டிய நிலைப்பாடும் உள்ளது. விசேடமாக இந்த நிதியத்தின் மூலமாக இதனை செய்து தரவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.

வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரை பிரதான தொழிலாக விவசாயம் காணப்படுகின்றது. விவசாயத்திலும் நெற்பயிர்ச் செய்கை பிரதான இடத்தை பெறுகின்றது.

சிறுபோக நெற் செய்கைக்கு மக்கள் அவதிப்படுகின்ற நிலையும் காணப்படுகின்றது. சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ளும்  நிலத்தின் அளவு குறைவாக உள்ளது.

அதற்கு குளத்து நீர் போதாமை ஒரு காரணமாகும். குளங்கள் புனரமைப்பு செய்வதன் மூலமாக சிறுபோக நெற் செய்கையை அதிகரிக்க முடியும். விவசாயிகள் பொருளாதாரத்தில் மட்டுமன்றி எமது பிரதேச அரிசித் தேவையினையும் பூர்த்தி செய்ய முடியும்.

இப்போது கிராமிய வீதிகளையும் புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இது தவிரவும், கல்வியில்  இடமாற்றங்கள் பூதாகரப் பிரச்யினையாகவுள்ளது.

வடமாகாணத்தில் இடம்பெற்ற வலயங்களுக்கு இடையிலான இடமாற்றத்தில் மடு, வவுனியா வடக்கு, மன்னார், துணுக்காய் போன்ற வலயங்களில் இருந்து செல்ல வேண்டிய ஆசிரியர்களில் 99 வீதமானவர்கள் இடமாற்றத்தை ஏற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்..

அதேவேளை, குறித்த வலயங்களுக்கு வர வேண்டிய ஆசிரியர்கள் முழுமையாக வருகை தரவில்லை. மடு வலயத்தில் 29 ஆசிரியர்கள் வேறு வலயங்களுக்கு இடமாற்றமாகி சென்றுள்ளனர். 04 ஆசிரியர்கள் மட்டுமே வந்துள்ளனர். இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வறிய நிலையிலிள்ள மாணவர்களின் கல்வி மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான இடமாற்றங்களை மேற்கொள்ளும் போது மாகாண கல்வித் திணைககளம் கரிசனையோடு கவனம் செலுத்தி மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமன்றி, இடமாற்றம் சிலவற்றில பிழைகள் உள்ளன. தெரிவுகளில் தவறுகள் உள்ளன. எதிர்வரும் காலத்தில் துல்லியமான தகவல்களப் பெற்று ஆசிரியர்களுக்கு அநீதி இடம் பெறாத வகையில் இடமாற்றங்களை வழங்க வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் 3,517 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை உள்ளன. அரசாங்கத்தின்  சுற்று நிருபத்தின் மூலம் பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சுற்று நிருபத்தில் பல பிழைகள் உள்ளன. அதில் மாற்றம் செய்ய வேண்டிய தேவையும் உள்ளது. 

அதன் காரணமாக, பட்டதாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க அச்சுற்று நிரூபம் நிறுத்தப்பட்டுளது.  புதியதொரு சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது. புதிய சுற்று நிருபத்தில் 1,756 ஆசிரியர்கள் வடக்கு மாணத்தில் உள்வாங்கப்படவுள்ளனர்.

பற்றாக்குறையில் 50 சதவீதம் உள்வாங்கப்படவுள்ளார்கள். இதன் மூலமாக கணிசமான ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க முடியும். ஆனாலும், அதில் ஒரு தடையுள்ளது. ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டு நிலுவையிலுள்ளது. அந்த வழக்கையும் விரைவாக முடித்து இவ்வருடத்திற்குள் ஆசிரிய நியமனத்தை வழங்க எண்ணியுள்ளோம்.

பொதுவான வெட்டுப் புள்ளியை நிறுத்தி மாவட்டத்திற்கு தனித் தனியான வெட்டுப் புள்ளிகளை வழங்கி மாவட்டத்திற்குத் தேவையான ஆசிரியர்களை உள்வாங்குவதன் மூலமாக இடமாற்றப் பிரச்சனையையும் தீர்க்க முடியும். இது தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடியுள்ளோம்.

எம்மைப் பொறுத்தவரை வடக்கு மாகாணமானது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. எமது காலத்தில் வடக்கு மாகாணம் ஏனைய மாகாணங்களைப் போல முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். அதனை நோக்கி எமது பயணம் இருக்கின்றது. எமக்கு கட்சி பேதம் என எதுவும் கிடையாது.

உள்ளூராட்சி மன்றங்களில பல்வேறு கட்சிகள் ஆடசியமைத்துள்ளன. அவை எம்மோடு இணைந்து பணியாற்றும் பட்சத்தில் வடக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப முடியும். அரசியலுக்கு அப்பால் நாம் செயற்படுவதற்கு தயராக உள்ளோம். அதற்கு அவர்களது ஒத்துழைப்பையும் கேட்டு நிற்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments