Ticker

10/recent/ticker-posts

பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீடு: வௌியான விசேட அறிக்கை.

 தித்வா புயலினால் சேதமடைந்த நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்கான மானியங்கள் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் விவசாயத் திணைக்களம் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது. 

தற்போது வரை 66,965 நெல் விவசாயிகளுக்கும், ஏனைய பயிர்ச் செய்கைகளுடன் தொடர்புடைய 16,869 விவசாயிகளுக்கும் மானியங்கள் மற்றும் இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன்படி, நெற்செய்கைக்காக 66,965 விவசாயிகளுக்குச் சொந்தமான 33,215 ஹெக்டேயர் நிலப்பரப்பிற்கு 4,982 மில்லியன் ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அத்தோடு, நெற்செய்கைக்காக தற்போது வரை சுமார் 50,000 ஹெக்டேயர் நிலப்பரப்பிற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி வழங்கக்கூடிய அனைத்து விண்ணப்பங்களுக்கும் டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் கொடுப்பனவுகள் வழங்கப்படுமென்றும் அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை, மேலதிக உணவுப் பயிர்கள், காய்கறிகள் மற்றும் பழவகைகளுக்கான பயிர்ச் சேத இழப்பீடாக இதுவரை 16,869 விவசாயிகளுக்கு 670 மில்லியன் ரூபாய்களும் வழங்கப்பட்டுள்ளது. 

இதன்படி, 3,708 ஹெக்டேயர் நிலப்பரப்பிற்காக குறித்த இழப்பீட்டுத் தொகை தற்போது வரை வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments