கெளரி சின்னத்திரை தொடரில் நாயகியாக நடித்து வந்த நடிகை நந்தினி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதைப் போன்ற காட்சி படமாக்கப்பட்டிருந்த நிலையில், பெங்களூரில் தனது அறையில் தூக்கிட்டு இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனால், சக நடிகர்கள் அதிர்ச்சிச்சியுடன் பெங்களூர் விரைந்துள்ளனர்.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கெளரி தொடரில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை நந்தினி.
துர்கா, கனகா என்று இரட்டை வேடங்களில் சிறப்பாக நடிக்கும் நந்தினிக்கு தமிழில் இரசிகர் பட்டாளம் ஏராளம்.
தமிழில் முதல் தொடரிலேயே இரட்டைப் வேடங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்த நிலையில், அதனை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டவர் என்று சக நடிகர்களால் பாராட்டப்பட்டவராவார்.
கர்நாடக மாநிலம் கோட்டூர் பகுதியைச் சேர்ந்த நந்தினி, கன்னட தொடரில் நடித்ததன் மூலமாக சின்னத் திரைக்கு அறிமுகமானார்.
கன்னடத்தில் ஜூவா ஹூவாகிடி, சங்கர்ஷா, மதுமகளு, நீனாடே நா, போன்ற தொடர்களில் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளார். இதனால் கன்னட இரசிகர்களிடையே பிரபலமான நந்தினி, கெளரி தொடரின் மூலமாக நாயகியாக தமிழில் அறிமுகமானார்.
கெளரி தொடரின் படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற்று வருகின்றது. இதனால், பெங்களூரிவில் தங்கியிருந்து படப்பிடிப்பில் நந்தினி பங்கேற்றுள்ளார். இந்நிலையில், அறையில் இறந்த நிலையில் அவருடைய உடல் மீட்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்குப் பின்பே விரிவான தகவல்கள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments