செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட போலித் திரைப்பட முன்னோட்டக் காட்சிகளை வெளியிட்டு, அதிகாரப்பூர்வமானவை என்று நம்ப வைத்த 02 பாரிய Youtube தளங்களை Youtube நிறுவனம் அதிரடியாக முடக்கியுள்ளது.
இந்தியாவைத் தளமாகக் கொண்ட 'ஸ்கிரீன் கல்ச்சர்' (Screen Culture) மற்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட 'கே.எச். ஸ்டுடியோ' (KH Studio) ஆகிய 02 Youtube தளங்களுமே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த 02 Youtube தளங்களும் இணைந்து சுமார் 20 இலட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களையும் (Subscribers), 01 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும் கொண்டிருந்தன.
இந்த Youtube தளங்கள் ஏற்கனவே வெளிவந்த திரைப்படங்களின் காட்சிகளுடன், AI மூலமாக உருவாக்கப்பட்ட போலி காட்சிகளை இணைத்து புதிய திரைப்படங்களின் ட்ரெய்லர்கள் போல வெளியிட்டன.
இதனைப் பார்த்த பல இரசிகர்கள், இவை ஹொலிவுட் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வெளியீடுகள் என்று நம்பி ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆரம்பத்தில் இக்காணொளிகள் "இரசிகர்களால் உருவாக்கப்பட்டது" என்ற குறிப்பு இருந்தது. ஆனால், சமீபகாலமாக குறித்த எச்சரிக்கை வாசகங்களையும் நீக்கிவிட்டு இவை உண்மையானவை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
ஹொலிவுட் நிறுவனங்களின் காப்புரிமை பெற்ற காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதும், தவறான தகவல்களைப் பரப்பியதும்குறித்த Youtube தளங்கள் முடக்கப்படுவதற்கு காரணமாகும்.
Youtube நிறுவனத்தின் கொள்கைகளை இந்த Youtube தளங்கள் கடுமையாக மீறியுள்ளதாக Youtube ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். திரைப்படத்துறையில் Artificial Intelligence ஆல் உருவாக்கப்படும் போலி உள்ளடக்கங்கள் அதிகரித்து வரும் நிலையில், Youtube எடுத்துள்ள குறித்த அதிரடி நடவடிக்கை ஏனையோருக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

0 Comments