Ticker

10/recent/ticker-posts

23 ஆம் நம்பர் வார்ட்: நாவல் குறித்த இரு வாசகர்களின் கருத்துகள்

“23 ஆம் நம்பர் வார்ட்” என்ற எனது நாவலை இதுவரை கிண்ணியாவில் மாத்திரமே அறிமுகப்படுத்த முடிந்துள்ளது. அங்கு அந்த அறிமுக நிகழ்வு முடிந்த 02 நாட்களில் நாட்டில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு விட்டது. அதனால் வேறு எங்கும் நாவலின் அறிமுக நிகழ்வை நிகழ்த்துவது பற்றி சிந்திக்கவே முடியவில்லை.

எனினும், இடைப்பட்ட காலத்தில் நண்பர் மாரி மகேந்திரன் இந்நாவலை அனுப்புமாறு கேட்டிருந்தார். அவருடைய கைகளில் நாவல் கிடைத்ததுமே அதனை வாசிக்க ஆரம்பித்து அது பற்றி தனது கருத்துகளை அவ்வப்போது என்னிடம் தெரிவித்து, இறுதியில் அதை முழுமையாக வாசித்த பின்னர், அது தொடர்பான தனது கருத்துகளை முகநூலில் (Facebook) பதிவிட்டார்.

இவருடைய பதிவுகள் மிகுந்த உணர்ச்சியுடன் வெளிப்பட்டிருந்தன. அந்நாவலின் தாக்கத்திலிருந்து தன்னால் வெளிவர முடியவில்லையென்றும் அன்று முழுவதும் தான் சாப்பிடவில்லையென்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். என்னுடன் தொலைபேசியில் உரையாடும்போது, ஒரு சிறந்த திரைப்படத்தை பார்த்த அனுபவத்தை இந்நாவலில் தான் அடைந்ததாக தெரிவித்தார். இந்நாவலை ஒரு திரைப்படமாக எடுக்க வேண்டும் என்றும் அதற்கான முயற்சிகளை தான் முன்னெடுப்பதாகவும் அவர் மேலும் கூறினார். நேர்மையாகக் கூறினால், அவருடைய கருத்துகள் எனக்கு சங்கடத்தையே ஏற்படுத்தின. அவை அளவு மீறிய மிகைப்படுத்தலோ என்றும் சிந்தித்தேன்.

எனினும், அவருடைய பதிவுகளைப் பார்த்த விக்னேஷ்வரன் என்பவர் என்னுடன் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு, தனக்கு இந்நாவலை வாசிக்கும் ஆர்வம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி தனக்கும் நண்பர்களுக்கும் உடனடியாக 05 பிரதிகளை அனுப்புமாறு வேண்டிக் கொண்டார். நானும் அனுப்பினேன்.

விக்னேஷ்வரன் தனது பணி சார்ந்த விடயங்களில் நீண்ட நேரம் உழைப்பவர். அதனால் அவருக்கு இந்த நாவலை பகுதி பகுதியாகத்தான் வாசிக்க முடிந்தது. முதல் சில பக்கங்களை வாசித்த பின்பு, அவற்றிலுள்ள உரையாடல் சார்ந்த மொழிநடையைப் புரிந்து கொள்வது தனக்கு சிரமமாக இருப்பதாகக் தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து வாசிக்கையில், அச்சிரமம் அகன்று விட்டது. ஒவ்வொரு பகுதியையும் வாசித்து முடித்த பின்பு, அது பற்றி அவர் எனக்கு குரல் வழி (Voice Record) செய்திகளை அனுப்பிக் கொண்டேயிருந்தார். அவை இந்நாவல் அவரை எவ்வளவு தூரம் ஆட்கொண்டிருந்தது என்பதை எனக்கு வெளிப்படுத்தின.

விக்னேஷ்வரனுடனான குரல் வழியான  செய்தி உரையாடல் எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இதற்கு முன்னர் அவருக்கும் எனக்கும் இடையே எந்தவிதமான தொடர்பும் இருந்ததில்லை. நாவலின் இறுதிப் பகுதிகளுக்கு வந்தபோது, அவர் உண்மையிலேயே பெரும் பதற்றமடைந்திருந்தார். நாவலை அவர் வாசித்து முடிக்கையில், தான் கதையின் நாயகனான பஷீருடன் வாழ்வது போன்று உணர்வதாகக் குறிப்பிட்டுச் சொன்னார். அண்மையில் மரணித்த தனது தந்தையை பஷீரில் தான் காண்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மாரி மகேந்திரனும் விக்னேஷ்வரனும் இனம், வாழிடம், மதம், பண்பாட்டு அம்சங்கள் சார்ந்து என்னிலிருந்து வேறுபட்டவர்கள். அப்படியிருந்தும் எனது நாவல் அவர்களை முழுமையாகவே ஆகர்ஷித்திருக்கிறது. வயதின் அடிப்படையில் மகேந்திரன் எனக்கு சமகாலத்தவராக இருக்கின்றார். இந்நாவலில் சொல்லப்பட்டுள்ள 83, 89 காலப்பகுதிகளை அவர் நிறைய அனுபவித்துள்ளார். ஆனால் விக்னேஷ்வரனின் நிலையானது முற்றிலும் வேறானது. அவருக்கு எனது வயதில் பாதிதான். 83, 89 காலப்பகுதிகளில் அவர் பிறக்கவில்லை. அதன் பின்னரும் 2,000 வரையிலான நிகழ்வுகளில் அவர் ஒரு சிறுவன். எனவே, இந்த நாவலின் காலப் பகுதி ஒருவகையில் அவருக்கு அந்நியமானது. இருப்பினும், அவர் இந்த நாவலுடன் ஒன்றிப் போயிருந்தார். 

நாவலை வாசித்து முடித்த பின்பு, அதிலுள்ள சில பாத்திரங்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று அவர் மிகவும் ஆர்வமாகக் கேட்டார். அவருடைய அந்த ஆர்வத்தின் பின்னர் நானும் அவற்றை பற்றி கூடுதலாக சிந்திக்க வேண்டியவனானேன். இந்நாவலின் இரண்டாம் பாகத்தை நான் அவசியம் எழுத வேண்டுமென்றும் அதற்கு தன்னாலான உதவிகளை தான் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் என்னை வேண்டிக் கொண்டார்.

புதிய தலைமுறையினர் மத்தியில் வாசிப்பு அருகி விட்டது என்பதனை பொய்யாக்குவதாக விக்னேஷ்வரனுடனான அனுபவம் இருக்கின்றது. இந்த இரண்டு நண்பர்களுடனான எனது நாவல் சார்ந்த அனுபவம் மிகவும் திருப்தி, மகிழ்வு, பெருமிதம் என்பவற்றை ஒரு சேர எனக்குத் தந்துள்ளன. நன்றி நண்பர்களே! 


அ. வா. முஹ்ஸீன் 

Post a Comment

0 Comments