Ticker

10/recent/ticker-posts

சர்ச்சைக்குரிய பாடத் தொகுதி தொடர்பான அறிக்கை சமர்பிப்பு.

புதிதாக அச்சிடப்பட்ட தரம் 06 ஆங்கில மொழிப் பாடத் தொகுதியில் (Module), தகாத இணையத்தளம் ஒன்றினை குறிக்கும் விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அது குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட உள்ளகக் குழு தமது அறிக்கையினை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (04) இடம்பெறும் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஹேரத், அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் இவ்விடயம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார். 

இது அரசாங்கத்தினுடைய கூட்டு முயற்சி மற்றும் பொறுப்பாகும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நாங்கள் எடுக்கும் அரசாங்கத்தினுடைய கொள்கை ரீதியான நிலைப்பாடு இதுவாகும். எனவே, சிலர் தமது அரசியல் மற்றும் ஏனைய குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகப் பிரதமரை இலக்காகக் கொண்டு முன்வைக்கின்ற விமர்சனங்களை நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம். அவ்வாறு எதுவுமே இல்லை. இங்கு அரசாங்கத்தின் கூட்டுக் கொள்கையின் அடிப்படையிலான செயற்பாடே காணப்படுகின்றது. தேசிய கல்வி ஆணைக்குழுவின் கொள்கை ரீதியான கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே தேசிய கல்வி நிறுவகம் (NIE) இக்கல்விச் சீர்திருத்தங்களைத் தயாரித்தது. ஆகவே, கல்வியமைச்சின் மூலமாகவே இவை அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன. இதனை நடைமுறைப்படுத்துவது நம் அனைவருடைய பொறுப்பாக மாறியுள்ளது. எனவே, இச்செயன்முறையில் ஓரிடத்தில் குறைபாடு ஒன்று நிகழ்ந்துள்ளமையை நாம் மிகவும் தெளிவாகக் கண்டோம். 

தரம் 06 பாடத்திட்டத்துடன் தொடர்புடைய பாடத் தொகுதியில் (Module) பாரதூரமானதொரு தவறு உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்தவறை கல்வியமைச்சு தற்போது மிகத் தெளிவாக அவதானித்துள்ளது. அது அடையாளம் காணப்பட்டவுடன், பிரதமருடைய ஆலோசனையின் பேரில், செயலாளரினூடாக உடனடியாக உள்ளகத் தரவுகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காகக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. குறித்த அறிக்கை தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த அறிக்கையின் அடிப்படையில், அந்த தவறுக்குக் காரணமானவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான எதிர்காலச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

எனவே, இது எவ்வகையிலும் தரம் 06 இற்கான இப்பாடத் தொகுதியில் உள்ளடக்கப்படக் கூடாததொரு விடயமாகும். எனவே, அதனை நீக்குவதற்கு கல்வியமைச்சு கட்டாயமாகத் தீர்மானிக்கின்றது. அத்தோடு, இச்சீர்திருத்தங்களை மேலும் ஆக்கபூர்வமான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு கல்வியமைச்சு விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார். 

புதிதாக அச்சிடப்பட்ட தரம் 06 ஆங்கில மொழித் தொகுதியில் தகாத இணையத்தளம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அதனுடைய விநியோகம் உடனடியாக இடைநிறுத்தப்பட்டது. 

குறித்த தொகுதியில் தகாத இணையத்தளப் பெயரொன்று உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த முறைப்பாட்டையடுத்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகக் கல்வியமைச்சு தெரிவித்தது. 

சர்ச்சைக்குள்ளாகியுள்ள இப்பாடத் தொகுதி தேசிய கல்வி நிறுவகத்தால் தயாரிக்கப்பட்டதுடன் ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து கல்வியமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றையும் அளித்தார். 

வெளித்தரப்பொன்றின் சதித்திட்டத்தின் மூலம் இதனைச் சேர்த்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகச் செயலாளர் கலுவெவ தெரிவித்திருந்தார். 

மேலும், இவ்வாறான அங்கீகரிக்கப்படாத செயலைச் செய்ததற்குப் பொறுப்பான நபர்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

எவ்வாறாயினும், இது இறுதி அச்சிடப்பட்ட பதிப்பல்ல எனவும், இதன் முழுப் பொறுப்பும் கல்வித் திணைக்களத்தையே சாரும் என்றும் தெளிவுபடுத்திய செயலாளர் கலுவெவ, இவ்வெளியீடு எவ்வகையிலும் சட்டரீதியாக இறுதி செய்யப்படவில்லை என்று வலியுறுத்தினார். 

இதேவேளை, சர்ச்சைக்குரிய தரம் 06 ஆங்கிலத் பாடத் தொகுதி தொடர்பான விசாரணை முடியும் வரையில், தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா வித்தானபதிரன தமது பதவியிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments